Advertisment

கரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...

Advertisment

ஊரடங்கு காலத்தில் அரசின் விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, விதிகளை மீறி கட்சியினருடன் சேர்ந்து மாபெரும் ஊர்வலம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் திருவண்ணாமலை தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச பிரச்சனையால் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் கைதாகி சிறை சென்றது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுயிருந்தவருக்கு ஜெ. மறைவுக்கு பிறகு அடுத்தடுத்து கட்சியில் பதவிகள் வாங்கி வந்தார். ஆனாலும் அவரின் கனவான மா.செ பதவியில்தான் மீண்டும் அமரவேண்டும் என நினைத்தார். இரண்டு வாரத்துக்கு முன்பு மா.செ.வாக அக்ரி நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை பெரிய அளவில் கொண்டாடவேண்டும் என முடிவு செய்தார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி.

அதன்படி ஆகஸ்ட் 8ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேவூர்.ராமச்சந்திரன் திருவண்ணாமலை நகருக்கு வருவதாக அறிவித்திருந்தார். அவரோடு சேர்ந்து திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளை மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தார்.

Advertisment

இதற்காக திருவண்ணாமலை, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டினார். இருநூறுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள், 50க்கும் அதிகமான கார்களில் அக்ரியும் அவரது ஆதரவாளர்களும், அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தனர். இதற்காக அதிமுகவினர் நடத்திய ஊர்வலம் திருவண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, 500க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் கட்சி கொடி கட்டிக்கொண்டு, நகரத்தில் ஊர்வலம் வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கரோனா கால ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, அரசாங்கத்தின் விதிகளை மீறி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்தது. சுமார் 3 மணி நேரம் திருவண்ணாமலை நகரத்தை வலம் வந்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தியதை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது.

தற்போது இதுதொடர்பாக திமுக உட்பட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். சமூக வளைதளங்களில் திமுகவினர், நலத்திட்ட உதவிகள் வழங்கிய நாங்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ், வெளிப்படையாக விதிகளை மீறி ஊர்வலம் நடத்திய அமைச்சர், அதிமுக மா.செ மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமான முதல் 5 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. அப்படிப்பட்ட மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுக, இப்படி வெளிப்படையாக 500 பேர்களுக்கு மேலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை திரட்டி ஊர்வலம் நடத்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஆளும்கட்சி என்பதால் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது. இவர்களால் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்குமோ என்கிற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விதிகளை அப்பட்டமாக மீறி ஊர்வலம் நடத்திய அதிமுகவினர் மீதும், அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் மீதும், மா.செ. மீதும்இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை காவல்துறை.

minister admk tiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe