
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்திற்கு உட்பட்டது காமநாயக்கன்பாளையம். அங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளிக்கு இன்று (29.01.2025) காலை மாணவர்கள் வழக்கம்போல் வருகை தந்தனர். அப்போது அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.
அந்த வகையில் 10ஆம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் இருக்கையிலும் மனிதக் கழிவுகளை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் மூலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் டி.எஸ்.பி.க்கு காவல் ஆய்வாளர் தகவல் அளித்தார்.
அதே சமயம் இந்த சம்பத்திற்குக் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மனிதக் கழிவை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அரசுப் பள்ளி வகுப்பறையில் மர்மநபர்கள் மனிதக் கழிவை வீசி சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.