
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அமலாத்தாள் மற்றும் செந்தில்குமார் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (29.11.2024) காலை அவர் வீட்டுக்கு வந்த சலவை தொழிலாளி ஒருவர், வீட்டில் இருந்த 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவிநாசி பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகை பணத்திற்காக இந்த கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்குத் துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், ‘இவற்றைத் தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?’ என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன. தமிழ்நாட்டைக் குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.