Skip to main content

காரும், லாரியும் மோதிய விபத்தில் 5 பேர் பலி; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

tirupur dharapuram car tanker lorry incident cm relief fund

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு என்ற இடத்தில் தாராபுரம் - பழனி செல்லும் சாலையில் காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்த 4 பேர் உயிரிழந்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 

கோவையில் இருந்து தாராபுரம் வழியாக பழனி நோக்கி சென்ற காரில் பயணித்த 3 பெண்கள் உட்பட் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் இன்று (16.11.2023) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (வயது 50). கோயம்புத்தூர் மாவட்டம். பெரியநாயக்கன்பாளையம், வஞ்சியம்மா நகரைச் சேர்ந்த தமிழ்மணி (வயது 50), அவரது மனைவி சித்ரா (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கலாராணி (வயது 55) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

tirupur dharapuram car tanker lorry incident cm relief fund

 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்