சிலிண்டர்கள் வெடித்து விபத்து; 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டம்!

tpr-ins-42

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். நகர் பகுதி. இப்பகுதியில் சாரா தேவி என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இதில் 42  தகரக் கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் எனப் பலரும் இங்குத் தங்கி பணியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பணியாளர்கள் பணிக்குச் சென்றிருந்த நிலையில் இன்று (09.07.2025) மதியம் திடீரென4 சிலிண்டர்கள் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த 42 தகரக்கொட்டைகளும் முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு, அனுப்பர்பாளையம் மற்றும் வேளம்பாளையம் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளும், பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

4 சிலிண்டர்கள் வெடித்து ஒரே நேரத்தில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவமானது திருப்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயானது வெளிப்பகுதிகளுக்குப் பரவாமல் 42 தகரக் கொட்டைகள் அடங்கிய பகுதியில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 42 குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த உடைமைகள் அனைத்துமே இழந்துள்ளனர். 42 வீடுகளிலும் இருந்த இரு சக்கர வாகனங்கள், பீரோக்கள், கட்டில்கள் மற்றும் பாத்திரங்கள் என அனைத்துமே சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

fire incident gas cylinder Tiruppur
இதையும் படியுங்கள்
Subscribe