Skip to main content

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

tiruppur district amaravati dam opening cm palanisamy order

 

 

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

 

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 6048.00 மிக கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் குறுவை சாகுப்படிக்காக அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2661.00 மிக கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 8709.00 மி.க. அடிக்கு மிகாமலும் 20/09/2020 முதல் 02/02/2021 முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

 

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 51,803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Announcement of Communist Party of India candidates

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார். திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். 

Next Story

கலை நிகழ்ச்சியை காண சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; அதிமுக நிர்வாகி அதிரடி கைது 

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
AIADMK official arrested for misbehaviour Incident happened to the girl in tiruppur

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவிலில் தேரோட்டத் திருவிழா கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அதனையொட்டி, அதே பகுதியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கலை நிகழ்ச்சியை காண, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர். அந்த வகையில், இந்த கலை நிகழ்ச்சியை காண அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியும், அவரது தாயும் வந்துள்ளனர். 

இந்த நிலையில், இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சி முடிய காலதாமதமானதால், சிறுமியை அவரின் தோழியுடன் விட்டுவிட்டு தாய் மட்டும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும், தனது மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த தாய், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு சென்று தேடிபார்த்துள்ளார். இரவு முழுக்க எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த சிறுமியுடன் தாய் விசாரித்த போது, நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலும் தன்னை கடத்தி அங்குள்ள தோட்டத்துக்கு கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த வெள்ளக்கோவில் போலீசார், சிறுமியை வன்கொடுமை செய்த காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் (32), செம்மாண்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்த நிலையில் மேலும் 5 பேரை கைது செய்தனர். இதனையடுத்து, அதிமுக ஐ.டி விங் நிர்வாகி தினேஷ், சதிஷ், நவீன்குமார், நந்தகுமார், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில், தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர். கலை நிகழ்ச்சியை காண சென்ற சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.