Skip to main content

மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பொது மக்கள் தர்ணா போராட்டம்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் கிராமத்தில் புதியதாக  கல்குவாரி அமைக்க கனிம வளத்துறை முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வருவாய்த்துறை, தீயணைப்பு துறை போன்ற பல்வேறு துறைகளும் சில விதிகளை மீறி அனுமதி கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு அலுவலகமும் கல்குவாரிக்கு அனுமதி தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

tiruppatur district ambur taluk public peopels

இந்த கல்குவாரி அமையும் இடத்துக்கு அருகில் நரிக்குறவர்கள் வீடுக்கட்டியும், குடிசைப்போட்டும் வாழ்ந்து வருகின்றனர். அதோடு அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரின் விவசாய நிலமும் உள்ளது. குவாரி அமைந்தால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு, நரிக்குறவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் நரிக்குறவர்கள் வாணியம்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பிப்ரவரி 13 ந்தேதி முற்றுகையிட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரி அமைய அனுமதி வழங்கக்கூடாது என மனு தந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காற்று தரக்குறியீட்டு அளவை வெளியிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Pollution Control Board published the air quality index

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகிப் பண்டிகை  கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழாவின் முதல்நாள் போகி ஆகும். கிரிகோரியன் நாள்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும். அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் இந்த உத்தரவையும் மீறி பல்வேறு பொருட்கள் எரிக்கப்பட்டன. இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது.

அதே சமயம் கடும் புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் 50 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மொத்தம் 21 விமானங்கள் புறப்படுவதிலும், 21 விமானங்கள் சென்னைக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு மோசமான அளவிற்கு அதாவது 270 என்ற அளவில் பாதிவாகியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று (13.01.2024) காலை 8 மணி முதல் இன்று (14.01.2024) காலை 8 மணி வரையிலான 24 மணி நேர காற்றின் தரக்குறியீட்டு அளவீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாநகரில் குறைந்தபட்ச மிதமான அளவில் அதவாது 131 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டு மதிப்பை ஒப்பிடும் போது காற்றின் தரக்குறியீட்டு மதிப்பு ஒரே மாதிரியாக உள்ளது எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story

வாயுக்கசிவு; ஆலை நிர்வாகத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
gas leakage; Pollution Control Board orders for plant management

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலைக்கு, துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, ‘எண்ணூரில் ரசாயன ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட காரணமான பைப் லைனில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராம்/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா 2090 மைக்ரோ கிராம்/m3 ஆகவும், கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா 49mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்ட இடத்தை இன்றைக்குள் கண்டறிந்து சரிசெய்யப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அமோனியா கசிவு ஏற்பட்ட குழாயை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உடைப்பை சரிசெய்த பின் கடல்சார் வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகே அமோனியா வாயு குழாயை இயக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.