Tiruppattur jewelry  Theft

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (35). இவர் மே 14 ந்தேதி காலை திருப்பத்தூர் நகரில் உள்ள வங்கிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் அவர் வங்கியில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

Advertisment

Advertisment

தாமலேரி முத்தூர் மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சாலையை கடக்கும்போது, ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி 3 பேர் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சுகந்தியை மடக்கி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி வேகமாக சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி திருடன், திருடன் என கூச்சலிட்டார். ஆனால் மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சுகந்தி தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் ஆங்காங்கே போலீசாருக்கு தகவல் தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடினர். அப்போது குரிசிலாப்பட்டு போலீசார், கல்லுக்குட்டை புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போதே ஒருவன் தப்பி ஓடியுள்ளான். உடனே உஷாரன போலீஸார் மற்ற இருவர் தப்பி ஓடாதபடி பிடித்தனர்.

பிடிபட்ட 2 பேரையும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க, அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது உறுதியானது. இதுகுறித்து சுகந்தி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.