"டெல்லி வன்முறையை தடுக்க முதலில் பாஜகவினரை கைது செய்ய வேண்டும்"- ஆளூர் ஷா நவாஸ் பேட்டி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தி 8- வது நாளாக ஷாஹீன் பாஃக் என்கிற பெயரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

tiruppattur district vaniyambadi viduthalai chiruththaikal katchi

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிப்ரவரி 26- ந்தேதி இரவு விடுதலை சிறுத்தை கட்சியின் இணை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம், "குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்து உள்ளது.

குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திருத்தம், மக்கள் தொகை கணக்கெடுப்பில் வைத்துள்ள கூடுதலான கேள்விகள். இதுதான் இப்போது பிரச்சனை. அதை திரும்ப பெற வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். இதே போல் தமிழக அரசு என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போடும் வரை இந்த போராட்டம் தொடரும்.

டில்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம், டில்லி காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. முஸ்லிம் கடைகளை பார்த்து தீவைப்பது, சூறை ஆடுவதை காவல் துறை வேடிக்கை பார்த்துள்ளது. குஜராத், மும்பை, கோவை ஆகிய நகரங்களில் கலவரம் எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டதோ, அதேபோல் தான் டில்லியில் நடந்த வன்முறை சம்பவம்.

டில்லியில் நடந்தது போல் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும் என்று ஹெச்.ராஜா ட்வீட் போடுகின்றார். தமிழக முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்தால் அதற்கு ஹெச்.ராஜா தான் பொறுப்பாவார். மத்திய, மாநில அரசுகள் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் முதலில் வன்முறையை தூண்டும் பாஜகவினரை கைது செய்ய வேண்டும்" என்றார்.

TIRUPPATUR vaniyambadi viduthalai siruthai katchi
இதையும் படியுங்கள்
Subscribe