Skip to main content

காதல் ஜோடிக்கு அபராதம்...  கம்பி எண்ணும் அரசியல் பிரமுகர்கள்...

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

tirupattur love couple family paid fain... political party people in jail


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிழ்பள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் 24 வயதான ஜீவானந்தம். பட்டப்படிப்பு முடித்துள்ளார். வாணியம்பாடி அடுத்த சின்னகொல்லகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 19 வயது மகள் பவானி.
 

ஜீவானந்தம் வாணியம்பாடியில் நகரிலுள்ள தனியார் கணினி மையத்தில் கணினி பயிற்சியைப் பயின்று வந்துள்ளார். அதே கணினி மையத்தில் பவானியும் சேர்ந்து படித்துவந்துள்ளார். அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் பவானிக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர்.
 

இதுபற்றி தனது காதலன் ஜீவானந்தத்திடம் பவானி கூறியுள்ளார். இருவரும் திட்டமிட்டு கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி இரவு ஊரை விட்டு வெளியேறி, மறுநாள் 16ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதலர்களைத் தேடி அலைந்த இரண்டு குடும்பத்தாரும், இருவரின் நண்பர்களின் உதவியுடன் தம்பதிகளிடம் பேசியுள்ளனர். இரு குடும்பத்தாரும், ஊருக்கு வாங்கள் இங்கேயே குடும்பம் நடத்துங்கள் எனச் சொல்ல, 20ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளனர். ஊருக்கு வந்த இவர்களை இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

tirupattur love couple family paid fain... political party people in jail

 

ஊரை மதிக்காமல் போய்த் திருமணம் செய்துக்கொண்டது தப்பு, ஊர் பஞ்சாயத்து நடக்கும், அங்க வாங்க, தண்டனை தரப்படும் எனக் கூறியுள்ளனர் ஊரின் முக்கியப் பிரமுகர்கள். அதன்படி, அதேகிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் செல்வராஜ், கமலநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் தலைமையில் பஞ்சாயத்து நடந்துள்ளது. பஞ்சாயத்தின் முடிவில், ஊரை மதிக்காமல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, மாப்பிள்ளைக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம், பெண் வீட்டாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

 

"பெத்தவங்க நாங்களே ஏத்துக்கிட்டோம், அப்பறம் என்னங்க?" எனத் தம்பதிகளின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "இது பஞ்சாயத்துத் தீர்ப்பு, தீர்ப்பை மதிக்கலன்னா, ஊரை விட்டு ஒதுக்கிவச்சிடுவோம்" என பதிலுக்கு மிரட்டியுள்ளனர் பஞ்சாயத்து செய்தவர்கள்.
 

இதனால், ஊர் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டு இருவீட்டாரும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியுள்ளனர். மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை நவம்பர் 20-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டி உள்ளனர்.

 

tirupattur love couple family paid fain... political party people in jail

 

தந்தையை இழந்து, தாய் கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் பிழைப்பை நடத்தி வந்த ஜீவானந்தம் மனமுடைந்து இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் அளித்துள்ளார்.
 

cnc

 

அந்தப் புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வம் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் காதலித்து இருவரும் திருமணம் செய்துகொண்டு இருவீட்டாரின் சம்மதத்தையும் பெற்றுள்ள நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்து, அபராதம் விதித்தது உண்மை எனத் தெரியவந்தது.
 

இதனால் பஞ்சாயத்து செய்த ஊர் நாட்டாமை, முக்கியப் பிரமுகர்கள், தி.மு.க கிளைச் செயலாளர் செல்வராஜ், வாணியம்பாடி ஒன்றிய அ.ம.மு.க தலைவர் கமலநாதன் ஆகியவர்களை ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகத்தை போலீஸார் தப்பிக்க வைத்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்