Skip to main content

விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள்... விவசாயிகள் வேதனை!

Published on 29/12/2019 | Edited on 29/12/2019

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காட்டு யானைகள் கூட்டம் கடந்த 21- ஆம் தேதி மாச்சம்பட்டு பகுதியிலும், இரண்டாவது நாள் சின்னவரிகம் ஊராட்சி பெங்களமூலை என்ற கிராமத்திலும், 3- வது நாள் பந்தேரப்பள்ளி பகுதியிலும், 4- வது நாள் மீண்டும் மாச்சம்ப்பட்டு பகுதியிலும், 5- வது நாள் உமராபாத், மாச்சம்பட்டு, கொத்தூர், பாலூர், பனங்காட்டூர் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.

TIRUPATTUR DISTRICT AMBUR AGRICULTURE LAND ELEPHANTS FARMERS


இந்நிலையில் 6- வது நாளாக காட்டு யானைகள் கூட்டம் ஆம்பூர் அருகே ஓணாங்குட்டை கிராம பகுதியில் உள்ள நிலங்களில் புகுந்தது. விவசாயிகள் ஸ்ரீ ராமுலு, சுப்பிரமணி, கல்யாணி, ஏகநாதன், கிருஷ்ணன் ஆகியோரது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள  வாழை, துவரை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின.
 

பின்னர் டிசம்பர் 29- ஆம் தேதி காலை யானைகள் கூட்டம் அருகில் உள்ள காப்பு காட்டில் தஞ்சம் அடைந்துள்ளது. யானைக்கூட்டம் இரவு நேரத்தில் மீண்டும் நிலங்களில் ஊடுருவி பயிர்களை சேதம் ஏற்படுத்தும் என்று அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனிடையே யானை கூட்டத்தின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் மோதல்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Clash between BJP members over distribution of election money

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.