Skip to main content

பெண் சிசுக்கொலை.. கடுமையாக எச்சரித்த ஆட்சியர்! 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

tirupattur collector warns fake doctors

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 

இக்கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் இங்கு மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என கண்ணீர் மல்க, இருகரம் கூப்பிட்டு வேண்டுகோள் வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய ஒருவர் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது, அதனை செய்து தர வேண்டும். இங்கு உள்ள இளைஞர்கள் விளையாடுவதற்கும், பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதற்கும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், “பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். சிறுவயதில் கல்வியை தவறவிட்டு பெண்களுக்கு திருமணம் செய்வது கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை கண்டறியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. சிசுவின் பாலினத்தை கண்டறிந்து அவற்றை போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்யும் நபர்கள் மீதும், அதற்குத் துணை போகும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்