
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6ஆம் தேதி (06.02.2025) மதியம் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்குப் பயணம் செய்தார். பெண்கள் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு திடீரென கே.வி. குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து அப்பெண்ணை அந்த இளைஞர் கீழே தள்ளிவிட்டார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கர்ப்பிணிப் பெண் கழிவறைக்குச் சென்றபோது அங்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், இதனால் கூச்சலிட்டதால் அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண்ணைக் கீழே தள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கே.வி. குப்பம் காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அப்பெண்ணைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கை மற்றும் கால் உள்ளிட்ட இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதே சமயம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஹேமராஜ் ஏற்கனவே செல்போன் பறித்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைதானவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த (சிசு) குழந்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
அதே சமயம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கருச் சிதைவு ஏற்பட்டதால் கருவில் இருந்த 4 மாத சிசுவின் இதயத் துடிப்பு நின்றது உறுதி செய்யப்பட்டதால் அவரது வயிற்றில் இருந்த சிசு அகற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் கை, கால், மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.