Skip to main content

தன் அவதியை உணர்த்த விஷப்பாம்புடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்!

 

tirunelveli woman came district collector office with snake

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் அவ்வப்போது நூதன முறையில் மனுவை வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் நேற்று (25.04.2023) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. இதில் மானூர் வட்டம் வன்னிக்கோனேந்தல் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி சமரச செல்வி என்பவர்  தனது மகளுடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்தார்.

 

அப்போது அவர், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்திருந்த கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றை கொன்று  தனது பையில் வைத்திருந்ததை எடுத்து காண்பித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனைக் கவனித்த பின் அவரிடம்  இருந்த கண்ணாடி விரியன் பாம்பை போலீசார் கைப்பற்றினர். மேலும் பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து சமரச செல்வியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனுவை வழங்க போலீசார் அழைத்து சென்றனர்.

 

சமரச செல்வி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த தனது மனுவில், "முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டில் எனக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பசுமை வீட்டை கட்டி முடித்து விட்டோம். வீட்டுக்கு மின் இணைப்பு, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு பெறுவதற்கான முயற்சிகள் செய்தோம். அப்போது 3 பேர் சேர்ந்து ஊராட்சி செயலாளரிடம் வீட்டு வரி ரசீது, குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என கூறி இடையூறு செய்கிறார்கள். மேலும் மின் இணைப்பும் கிடைக்க விடாமல் இடையூறு செய்து வருகிறார்கள். இதுகுறித்து கேட்டதற்கு என்னை அடித்து,  கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தேவர்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எனது வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.

 

மின்சார வசதி இல்லாததால் எனது இரு குழந்தைகள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால்  வீடுகளிலும், வீட்டை சுற்றிலும் பாம்புகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் வளர்த்து வரும்  ஆடு, கோழிகள் பாம்பு கடித்து பலியாகி உள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இது குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கிறேன். மேலும் மாவட்ட ஆட்சியர் எனது மனு மீது கவனம் செலுத்தி உடனே மின் இணைப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு  அளிக்க வந்த ஒருவர் பாம்பையும் தன்னுடன் எடுத்து வந்த செயல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !