Skip to main content

தமிழகத்தில் முதன்முதலாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம், அபராதம் விதிப்பு...

Published on 13/02/2019 | Edited on 14/02/2019

 

teacher


 


நெல்லை மாவட்டத்தின் பங்களா சுரண்டை நகரிலுள்ள பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவர் ஆசிரியை வசந்தி ஹாசிராணி. இவரது பதவி உயர்வு பள்ளி நிர்வாகத்தால் 02.06.2018ல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் முறைப்படி தென்காசி கல்வி மாவட்டக் கல்வி அலுவலரான ஷாஜகான் கபீரின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் மாவட்டக் கல்வி அலுவலகம் அவரது பதவி உயர்வை அங்கீகரிக்கவில்லை மேலும் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை வசந்தி ஹாசிராணி தனது பதவி உயர்வுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 

இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுப்பிரமணியன், திட்டமிட்டே தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் இந்த அங்கீகாரத்தை வழங்காமல் இழுத்தடித்திருக்கிறார். ஆகவே அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆபராதம் விதிக்கப்படுகிறது. அதனை தலைமை நீதிபதி நிவாரண கணக்கில் பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல இவரைப் போன்ற கல்வி அதிகாரிகளால்தான், தமிழகத்தின் கல்வித்தரம் அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. இரண்டாவது இடத்தில் இருந்து 18 வது இடத்திற்குத்தள்ளப்பட்டுவிட்டது. என்று வேதனையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் நீதியரசர்.
 

இத குறித்து நாம் மாவட்டக் கல்வி அலுவலர் ஷாஜகான் கபீரைத் தொடர்பு கொண்டபோது,

அவர் சரியான முறையில் அணுகவில்லை. எங்களிடம் தெரிவிக்காமலே நீதிமன்றம் சென்றுவிட்டார். எங்களிடம் சொல்லியிருந்தால் முடித்திருப்போம். அவருக்கான ஆர்டர் போடும் நிலையில் தானிருந்தோம் அங்கீகரித்து விட்டோம். அதற்குள்ளாக நீதிமன்றம் சென்று விட்டார். நீதிமன்ற உத்தரவை நாங்கள் மறுதினமே ரிவோக் செய்து விட்டோம் என்கிறார்.
 

தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வு, ஊதிய உயர்வு பி.எப். கடன் உள்ளிட்ட பல்வேறு நிவாரணம் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் வந்துதான் ஆகவேண்டும். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் காரணமில்லாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்று சொல்லும் ஆசிரியர்கள், தமிழகத்தில் இதுவரை எந்தக் கல்வி அதிகாரியும் இப்படி ஒரு கண்டனத்தைப் பெற்றதில்லை. என்கிறார்கள்.
 

கல்வித்துறையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இத் தீர்ப்பு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 CM Stalin - Rahul Gandhi MP Campaign on one platform

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வருகிறார். ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தின் படி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலிக்கு வருகிறார். அங்குள்ள பெல் மைதானத்தில் 4 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டதில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளரையும் ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து  ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கோவை செல்கிறார். கோயம்புத்தூரில் இரவு 7 மணியளவில் செட்டிபாளையம் எல் அண்ட் டி பை - பாஸ் அருகில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார். அங்கு இருவரும் கூட்டாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 2 பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படையினர் சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Flying soldiers check Nayanar Nagendran's car

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் வீதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில், கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீரங்க வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Flying soldiers check Nayanar Nagendran's car

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பிரச்சாரத்திற்காக நயினார் ஆலங்குளம் அருகே உள்ள இடைக்கால் விலக்கிற்கு சென்றபோது, அவரது பரப்புரை வாகனம் மற்றும் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சோதனையானது சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. சோதனையின் முடிவில் பணமோ பரிசுப் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக நேற்று (08.04.2024) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததால் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.