/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tvl-court-art.jpg)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று (20.12.2024) காலை கீழநத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாயிலில் காத்திருந்தார். இந்நிலையில் அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்கு விரட்டினர். அதன் பின்னர் அவர் உயிருக்குப் பயந்து ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அச்சமயத்தில் அவர் நீதிமன்ற வாயிலில் வைத்து கொடூரமான முறையில் முகம் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.
அதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த படுகொலை கண்டித்து நீதிமன்றத்தின் அருகே உள்ள வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என முழக்கமிட்டனர். இதனால் திருநெல்வேலியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் நடமாட்டம் உள்ள பொது இடத்தில் பட்டப் பகலில் நடைபெற்ற படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)