Skip to main content

சாலை விபத்தில் இருவர் பலி; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Tirunelveli dt Thiruvambalapuram village near Thotapalli incident

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள திருவம்பலபுரம் கிராமம் தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் திருவம்பலபுரம் கிராமம் தோட்டபள்ளி அருகில் நேற்று (22.05.2024) அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி சந்தனகுமாரி (வயது 42) மற்றும் முருகேசன் என்பவரது மகள் முத்துச்செல்வி (வயது 30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

Tirunelveli dt Thiruvambalapuram village near Thotapalli incident

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” - முதல்வர் வேதனை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
CM Agonied Kallakurichi incident is something that should not have happened

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். அமைச்சர்கள், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க   மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

விஷச் சாராய மரணம்; விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Commission of Inquiry set up and ordered on kallakurichi issue

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டும், மாவட்ட காவல்துறையினர் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20-06-24) அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஜி.பி, மதுவிலக்குத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இதுபோன்று மீண்டும் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையம், கள்ளச்சாராய மரணம் சம்பவம் பற்றி முழுமையாக விசாரித்து பரிந்துரைகளை 3 மாதங்களில் வழங்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனால் வழங்கியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.