Tirunelveli dt Thachanallur Kannapiran incident

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான். பிரபல ரவுடியான இவர் மீது ஐந்து கொலை மற்றும் பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் ஒரு சமூக அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (16.10.2024) தச்சநல்லூரில் இருந்து சொந்த பணி காரணமாகக் குறிச்சி பகுதிக்குத் தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் இரண்டு கார்களில் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதன்படி இவர்கள் சென்று கொண்டிருந்த சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அங்கு வந்த கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது இந்த இரண்டு கார்களிலும் அரிவாள், கை துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த கண்ணபிரான் உள்ளிட்ட 16 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

மேலும், இவர்கள் ஏதேனும் சதித்திட்டம் செய்வதற்காகப் பயங்கர ஆயுதங்களை எடுத்துச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருநெல்வேலியில் பிரபல ரவுடி உட்பட 16 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.