/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/deepak-raja-art-smile.jpg)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/deepak-raja-art_1.jpg)
இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும் கொலை வழக்குடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த பிறகே தீபக் ராஜ் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இத்தகைய சூழலில் தான் தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் போலீஸாரிடம் சரணடைந்த 5 பேரை பாளையங்கோட்டை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த முத்து சரவணன், ஐயப்பன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பன, ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-ins-art_41.jpg)
போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இக்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரையும் போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)