tirunelveli ADMK fileld imspection meeting incident 

Advertisment

அதிமுகவின் கிளை, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கள ஆய்வு செய்தற்காக 'கள ஆய்வுக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அதிமுக கட்சி பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிக்க உள்ளனர்.

இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி மற்றும் வரகூர் அ. அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்த குழுவினர், கட்சி அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை டிசம்பர் 7ஆம் தேதிக்குள் (07.12.2024) அறிக்கையாகச் சமர்ப்பிக்க உள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக களஆய்வுக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று (22.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை தாங்கினார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாவட்ட முத்தையா, “கடந்த தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியை விடக் குறைவான வாக்கை அதிமுக இந்த தொகுதியில் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் மாவட்ட செயலாளர்கள் தான். இவர்கள் கட்சி தொண்டர்களுக்கு அறிவுரைகள் ஏதும் வழங்கவில்லை” என குற்றச்சாட்டை முன்வைத்து மேடையில் பேசிக் கொண்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மாவட்ட செயலாளராக உள்ள கணேஷ் ராஜாவின் ஆதரவாளர்கள் அவர் பேசி முடித்தவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அதோடு ஒருவரை ஒருவரைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அப்போது மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “யாரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். சமரசமாக அமருங்கள்” எனப் பலமுறை அறிவுறுத்தினார். அதனைக் கேட்க மறுத்த தொண்டர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட இருக்கைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் காரணமாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமாகக் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.