Skip to main content

ஓட்டுநருக்கு மாரடைப்பு;  62 உயிர்களைக் காத்த நடத்துநர்

 

tiruchendur trichy bus driver incident conductor save passengers life 

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தை மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரைச் சேர்ந்த முகேஷ் ராஜா (வயது 54) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்தின் நடத்துநராக மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கத்தைச் சேர்ந்த திருப்பதி (வயது 39) இருந்துள்ளார். அப்போது இந்த பேருந்தில் 62 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

 

இந்நிலையில் இந்த பேருந்தானது விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி சேதுராஜபுரம் என்ற  பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக ஓட்டுநர் முகேஷ் ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். இதனால் பேருந்தானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனைக் கண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர்.

 

இதனைக்  கண்டு  அதிர்ச்சியடைந்த நடத்துநர் திருப்பதி அப்போது சாமர்த்தியமாகச் செயல்பட்டு உடனடியாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். மேலும் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுநர் முகேஷ் ராஜாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முகேஷ் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும் இது குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !