மனிதர்கள் மற்றும் கால்நடைகளை துரத்தி துரத்தி கடித்த நரியை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

Advertisment

திண்டிவனம் அடுத்த நோளம்பூர் கிராமத்தில் நேற்று திடீரென காப்புக்காடு பகுதியில் இருந்து நரி ஒன்று ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த நரி, ஆனந்த் என்பவரின் கோழி, தினேஷ் என்பவரின் மாடு, துலுக்காணம் என்பவரின் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை தொடச்சியாக கடித்தது.பின்னர் துலுக்காணம் என்பவரது மகள் காளியம்மாள் (24) என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் மீது பாய்ந்து கடிக்க தொடங்கியது.

Advertisment

இதுவரை கால்நடைகளை கடிக்கும்போதெல்லாம் நாய் கடித்ததாக நினைத்து பொதுமக்கள் விரட்டி விட்ட நிலையில், மனிதர்களை கடிக்கும் போதுதான் நரி என்று தெரியவந்தது.பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி நரியை விரட்டத் தொடங்கினர். அப்போது மிரண்டு போன நரி, முத்தரசன் என்பவரது வீட்டின் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த அவரது மகள் மது நிஷா (5) என்ற குழந்தையை காலில் கடித்து குதறியது. மிரண்டு போன குழந்தை பலத்த சத்தத்துடன் அழத்தொடங்கியது. பதறிப்போன பெற்றோர் வீட்டின் உள்ளே சென்று குழந்தையை வெளியே தூக்கி வந்தனர்.

மேலும் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த நரி பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க ஆரம்பித்தது. அப்போது இளைஞர்கள் கையில் வைத்திருந்த தடியால் நரியை அடித்து கொன்றனர்.

Advertisment

நரி கடித்ததில் பலத்த காயமடைந்த 5 வயது குழந்தை மது நிஷா மற்றும் காளியம்மாள் ஆகிய இருவரையும் சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படாததால், ஒலக்கூர் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பின்பு ஒலக்கூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பட்டப்பகலில் நரி ஊருக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.