ADVERTISEMENT

லஞ்சம் வாங்கியபோது சிக்கிய சார்பதிவாளர்; கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

04:11 PM Mar 30, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் பழைய நீதிமன்றம் அருகில் தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் திண்டிவனம் அருகிலுள்ள பாங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரது மகன் பிரகாஷ்(43) என்பவர் தனது தந்தை தேவதாஸ் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு தான செட்டில்மென்ட் மூலம் எழுதி வாங்குவதற்காக ஆவண எழுத்தர் சரவணன் என்பவரை அணுகியுள்ளார். திண்டிவனத்தை சேர்ந்த சரவணன் பத்திர பதிவு அலுவலகத்திற்கு அருகில் ஆவண எழுத்தராக அலுவலகம் வைத்து செயல்பட்டு வருகிறார்

இதையடுத்து ஆவண எழுத்தர் சரவணன், பிரகாஷ் தந்தை பெயரில் உள்ள சொத்தை தான செட்டில்மென்ட் மூலம் எழுதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். அதன்படி நேற்று (29.3.2022) தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அதை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன்பே சார்பதிவாளர் சங்கரலிங்கம் ஆவண எழுத்தர் சரவணன் மூலம் பிரகாஷிடன் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பேரம் பேசியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ் இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் மறைந்திருந்தனர். இந்த நேரத்தில் பிரகாஷ், பத்திர எழுத்தர் சரவணன், பிரகாஷின் தந்தை மற்றும் சாட்சிகளுடன் நேற்று(29.3.2022) சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தைப் பதிவு செய்ய சென்றனர். அப்போது பிரகாஷ், பதிவாளர் சங்கரலிங்கத்துக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் சங்கரலிங்கம், ஆவண எழுத்தர் சரவணன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்ததோடு, சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் இது குறித்து ஏடிஎஸ்பி தேவநாதன் கூறுகையில், " அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து பொதுமக்கள் தைரியமாக எங்களுக்கு புகார் தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவி செய்ய 24 மணி நேரம் தயாராக உள்ளோம்" என்று கூறினார். இச்சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT