
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டது. இதனால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அதோடு, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. அதோடு உள்கட்டமைப்பு மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி அங்குச் சென்றார். அப்போது அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்மீது சேற்றை வாரி வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.