சேலத்தில், தந்தை பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து அவருக்குச் சொந்தமான 20 கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்ததாக நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் குகை திருச்சி முதன்மைச் சாலை பகுதியில் வசிப்பவர் சரவணன். இவருடைய மனைவி வனிதா. இவர், சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி., சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: எனது தந்தை சதாசிவம். அவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். என் தந்தையின் சொத்துகளுக்கு எங்கள் தாயார் ராஜேஸ்வரி, தங்கைகள் சுமதி, உஷாராணி, தம்பி திருமுருகராஜ் ஆகியோருடன் என்னையும் சேர்த்து 5 பேர் வாரிசுகள் ஆவோம்.
என் தம்பி திருமுருகராஜ், சங்ககிரியில் நகைக்கடை வைத்திருக்கிறார். என் தந்தை பெயரில், பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள 25க்கும் மேற்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மீது பாகப்பிரிவினை கோரி நானும், என் சகோதரிகளும் கடந்த 2019ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் பங்கு தர முடியாது என என் தம்பியும், அவருடைய மனைவியும் கூறி வந்தனர். அத்தனை சொத்துகளையும் என் தந்தை, என் தம்பியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து, கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் முதல் அவரே அனுபவித்து வருகிறார்.
இந்த போலி உயில் தயாரிக்க சங்ககிரியைச் சேர்ந்த ராஜாசண்முகம், முருகன், நடேசன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனக்கும், என் சகோதரிகளுக்கும், தாயாருக்கும் சேர வேண்டிய சொத்துகளை அபகரித்துக் கொண்டு, ஏமாற்றும் நோக்கத்துடன் போலி உயில் தயாரித்த திருமுருகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் வனிதா தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு எஸ்.பி., சிவக்குமார், மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இறந்துபோன சதாசிவம் பெயரில் போலியாக உயில் உள்ளிட்ட ஆவணங்களைத்தயாரித்து அவருக்குச் சொந்தமான 20 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகளை திருமுருகராஜ், அவருடைய மனைவி உமாமகேஸ்வரி ஆகியோர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருமுருகராஜ், அவருடைய மனைவி, போலி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்த ராஜா சண்முகம், முருகன், நடேசன் ஆகிய 5 பேர் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் காவல்துறை வசம் சென்றதை அறிந்த அவர்கள் ஐவரும் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.