
திருவண்ணாமலை நகரின் மையத்தில் உள்ளது அன்பு திரையரங்கம். இந்தத் திரையரங்கின் அருகில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகம், நகர மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மையமாக செயல்பட்டுவருகிறது.
கடந்த மே 27ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அந்தப் பள்ளியைப் பார்வையிட வருகைதந்தார். அப்போது அன்பு திரையரங்கில் இருந்து படம் ஓடும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியான கலெக்டர், அந்தத் தியேட்டருக்குள் சென்றார். அங்கு யாரும்மில்லாத தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்துள்ளது. அங்கு ஒரேயொரு ஊழியர் மட்டுமே இருந்துள்ளார். உடனடியாக தியேட்டருக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளும் சீல் வைத்துள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் சினிமா தியேட்டர் என்பது எலக்ட்ரிக்கல் வேலைகள் நிறைந்தது. மூடியே வைத்திருந்தால் உள்ளே எலி, மூட்டை பூச்சிகள் பார்வையாளர்கள் அமரும் குஷன் சீட்களை நாசம் செய்துவிடும். ஒயர்களைக் கடித்துடும். இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்படும். அதனால் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தியேட்டரில் 5 நிமிடம் ஏதாவது காட்சிகளை ஒளிபரப்புவோம். இது எல்லா தியேட்டர்களிலும் நடப்பதுதான் என்று தெரிவித்துள்ளார்கள்.
அதெல்லாம் தெரியாது, சீல் வைத்தது வைத்ததுதான் என கலெக்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் நிலைமையை எடுத்துச்சொல்ல, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கச் சொல்லி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை எனக் காரணம் கூறி அபராதம் விதித்துள்ளார். இந்தத் திரையரங்கம் மீது வேறு சில சர்ச்சைகள் உள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, ஊரடங்கில் ஆளே இல்லாத மூடப்பட்டுள்ள தியேட்டருக்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என அபராதம் விதித்திருப்பது பலதரப்பிலும் விமர்சனத்தை உள்ளாக்கியுள்ளது.

ஊரடங்கு விதிக்கப்படும்போதே வர்த்தக, வியாபார நிறுவனங்கள் வாரம் ஒருமுறை கடைகளைத் திறந்து சுத்தம் செய்துகொள்ளலாம் என்கிற வாய்மொழி உத்தரவு உள்ளது. அப்படியிருக்கும் நிலையில், நட்டத்தில் இயங்கும் திரையரங்குகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டே உள்ளன. முதல் அலை முடிந்து திறக்கும்போதே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே திறக்கப்பட்டன. இதனால் தியேட்டர்கள் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. அப்படியுள்ள நிலையில் பராமரிப்புக்காக 10 நிமிடம் இயங்கிய திரையரங்குக்கு அபராதம் விதித்திருப்பது திரையரங்க உரிமையாளர் சங்கத்திலும் முறையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.