
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், பாத்திமா நகர் வெள்ளச்சாமி தெருவைச் சேர்ந்தவர்கள் தமிழரசன் - அருள்மொழி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.10.2021) அன்று கிஷோர் கொசு மருந்து திரவ பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அதன் மேற்பகுதி திறந்துகொண்டதில் அதிலிருந்த திரவத்தை குழந்தை குடித்ததாக தெரிகிறது. அதன் பின்பு நெஞ்செரிச்சலால் கதறி அழுத குழந்தையை அருகில் இருந்த கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்காமல் நேரத்தைக் கடத்தியதோடு, பின்னர் குழந்தையைக் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அங்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மூன்று வயது குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பிரேதப் பரிசோதனைக்காக குழந்தையின் உடலை காரிலேயே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்தது எழும்பூர் மருத்துவமனை என்பதால் இங்கு பிரேத பரிசோதனை நடத்த முடியாது, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்.
இதனால் பலமணி நேரம் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜி.எஸ்.டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்துவருகிறார்கள். இந்நிலையில், குழந்தை இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கிஷோரின் பெற்றோர் தனியார் கிளினிக் மருத்துவர் சுபாஷ் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர் வேறொரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவ தொழில் செய்துவருவதாக கூறியுள்ளனர். இதனையறிந்த சுபாஷ் தனது கிளினிக்கைப் பூட்டிவிட்டு தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)