/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_19.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி கண்ணன் (30). இவரது மனைவி 26 வயது ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த நிலையில், இரண்டாவதாக ஜெயலட்சுமி கர்ப்பம் தரித்துள்ளார். இதனால் அவரது கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு, இன்று அதிகாலை ஆறு மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக புதுப்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ்-ல் நிறைமாத கர்ப்பிணி ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகிய மூவரும் ஏறினார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி, உதவியாளர் தேன்மொழி, செவிலியர் மீனா ஆகிய 3 பேர் என மொத்தம் 6பேர் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் புறப்பட்டனர். இவர்கள் பயணம் செய்த 108 ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் இடையிலுள்ள அரி பெருமானூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஆம்புலன்ஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1174.jpg)
இந்த விபத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணின் மாமியார் செல்வி நாத்தனார், அம்பிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்ப்பிணிப் பெண் ஜெயலட்சுமி, ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி, உதவியாளர் தேன்மொழி, செவிலியர் மீனா ஆகிய நால்வரையும் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_70.jpg)
விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மூன்று உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கு முக்கிய காரணம் 108 ஆம்புலன்ஸ் டயர், ஓடி ஓடி மிகவும் தேய்ந்து போனதால் அதன் டயர் சாலையில் செல்லும்போது சூடு ஏறி அதனுள்ளே இருந்த ட்யூப் திடீரென வெடித்துள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி மூன்றுபேர் உயிரிழப்புக்கு காரணமாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த விபத்துக்கு காரணம் 108 ஆம்புலன்ஸ் பராமரிப்பு பணிகளை சரியான முறையில் செய்யாததே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய், அவருடன் உதவிக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் மாமியார், நாத்தனார் ஆகிய இரு குடும்பத்தினருக்கும் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் புதுப்பட்டு கிராமத்தை மட்டுமல்ல கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)