கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியில் ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.

Advertisment

three students drowned in lake

புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த மணிவேலின் மகன்கள் பரணி(9), தரணி(8). அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் பூவரசன்(8). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பரணி 4ம் வகுப்பும், தரணி 3ம் வகுப்பும், பூவரசன் 3ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று பள்ளிக்கு சென்ற இவர்கள் 3 பேரும் பள்ளி முடிந்தவுடன் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது 3 பேரும் ஏரி சேற்றில் மாட்டிக்கொண்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை பார்த்து ஏரியில் குளித்த மற்ற மாணவர்கள் அலறியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் ஏரிக்கு சென்று உயிரிழந்த 3 மாணவர்களின் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

Advertisment

சம்பவ இடத்துக்கு சென்ற புவனகிரி போலீஸார் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.