three person arrested farmer case trichy

Advertisment

கரூரில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராகப் போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கனவே கல்குவாரி உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில்இன்று மேலும் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே தனியார் ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி நிறுவனத்தை செல்வகுமார்(45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் கல்குவாரி செயல்படும் காலம் முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவள துறையினரிடம் புகார் கொடுத்ததின் பேரில், கடந்த செப்டம்பர் 5ம் தேதி கனிமவளத்துறை அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறுத்தது.

இந்நிலையில் செப்டம்பர் 10ம் தேதி காருடையாம்பாளையம் அருகே விவசாயி ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்தக் கல்குவாரியின் வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முன்னதாகவே 2019 ஆம் ஆண்டு ஜெகநாதன் மற்றும் செல்வகுமார் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்பட்டது. அப்போது ஜெகநாதனை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் உயிரிழந்த ஜெகநாதன் என்பவர் மீது மோதிய வாகனம் கொலையா? அல்லது விபத்தா? என்பதை க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலை வழக்குப் பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டையிலிருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் கொலைக்கு சம்பந்தப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் கடந்த 10ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து இன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.