Three people including a brother and sister from the same family were passed away by lightning

பள்ளி முடிந்து ஒரே பைக்கில்வீட்டிற்குச் சென்ற அண்ணன், தங்கை, சித்தப்பா மூவரும் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகில் உள்ள பறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சஞ்சய் (18), சஞ்சனா (16) ஆகிய இருவரும் திருப்புனவாசல் ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

Advertisment

இன்று மாலை பள்ளி முடிந்ததும் பழனிசாமியின் பிள்ளைகளை அவரது தம்பி இளையராஜா (38) தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வரும்போதுஇடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மூவரையும் மின்னல் தாக்கியதில் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூவரின் உடல்களையும் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் நண்பர்களும் தோழிகளும் அவர்களது உடல்களைப் பார்த்துக் கதறி அழுதது காண்போரை உறைய வைத்தது. ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.