
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சகோதரிகள் உள்ளிட்ட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ளது அரசூர் கிராமம். இப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாறு செல்கிறது. சமீபமாக அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த அபிநயா அவருடைய சகோதரி சிவசங்கரி, உறவினர் பையனான ராஜேஷ் ஆகியோர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்புப் படையினர் மூன்று பேர் சடலங்களையும் மீட்டனர். உடலானது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி மூன்று பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் இந்த கிராமப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.