Three kid in ICU Who ate banana

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் விஜி என்கிற விக்னேஷ்(7). அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்கள் மூர்த்தி(7), பாலாஜி(12). அதே ஊரில் உள்ள பள்ளியில் படித்து வரும் இவர்கள் மூவரும், நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் ஊரை ஒட்டியுள்ள தொண்டி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

Advertisment

அங்கு வாழைப்பழங்கள் கிடந்துள்ளன. அதில் ஆளுக்கு ஒரு வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளனர். மூவரில் பாலாஜி மட்டும் வாழை பழத்தின் உள்ளே ஏதோ ஒரு மருந்து கலந்து இருப்பதை கண்டு சந்தேகமடைந்து அப்பகுதியில் வயலில் வேலை செய்பவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்குள் வாழைப்பழம் சாப்பிட்ட மூன்று சிறுவர்களுக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 3 சிறுவர்களையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து செஞ்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது விசாரணையில், அந்த வாழைப்பழத்தின் உள்ளே வயலுக்கு தெளிக்கப்படும் மருந்தை வைத்திருந்தது தெரியவந்தது. இது கொக்குகளைப் பிடிக்க இப்படி வாழைப் பழத்தில் மருந்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட 3 சிறுவர்களும் ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.