
சேலம் மாவட்டம், கருப்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சந்துக்கடைகள் மூலம் டாஸ்மாக் மதுபானங்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து ரகசியமாக விசாரிக்கும்படி நுண்ணறிவுப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. கருப்பூர் சுற்றுவட்டாரத்தில் மூன்று இடங்களில் சந்துக்கடைகள் இயங்குவதும், கருப்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர்கள் ஜெயராமன், ஹரிஹரன், கார்த்திகேயன் ஆகியோர் சந்துக் கடைக்காரர்களிடம் கையூட்டு வசூலித்துக்கொண்டு, சட்ட விரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமைக் காவலர்கள் மூவரையும் கருப்பூர் காவல் நிலையத்திலிருந்து உடனடியாக சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டார்.
இச்சம்பவம், குற்றத்திற்குத் துணைபோகும் காவல்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.