/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3838.jpg)
அரூர் அருகே, மின் வேலியில் சிக்கி பலியான காட்டு மாட்டை வனத்துறைக்குத் தெரிவிக்காமல் புதைத்த 3 விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சூலக்குறிச்சி கிராமம், பூமரத்துக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் என்கிற சுந்தரம், சக்திவேல், சின்னராமன். விவசாயிகளான இவர்கள், தங்களின் விளை நிலத்தில் காட்டுப் பன்றிகள் நுழைவதை தடுப்பதற்காக பொது மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பை எடுத்து, வயல்வெளியைச் சுற்றிலும் சட்ட விரோதமாக மின் கம்பி வேலி அமைத்து இருந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, உணவு தேடி வந்த காட்டு மாடு ஒன்றுமின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. மறுநாள் தோட்டத்துக்குச் சென்றவர்கள், யாருக்கும் தெரியாமல் விளை நிலத்திலேயே குழி தோண்டி காட்டு மாட்டை புதைத்து விட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.
அதன்பேரில் மண்டல வனப் பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு ஆகியோர் உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் வின்சென்ட், அரூர் வனச்சரகர் நீலகண்டன் மற்றும் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்த்தனர். அங்கு புதைக்கப்பட்ட காட்டு மாட்டின் உலர்ந்த கொம்புடன் கூடிய தலை மற்றும் சிதைந்த நிலையில் மாட்டின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து, காட்டு மாட்டை கொன்றதாக ராமச்சந்திரன், சக்திவேல், சின்னராமன் ஆகியேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களை அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகுசிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)