
"உங்க நிறுவனத்தைப் பற்றி செய்தி போட்டு அசிங்கப்படுத்திவிடுவோம்" என மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்ட போலி நிருபர்கள் மூவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மைக்காலமாகப் போலி நிருபர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சில நபர்கள் "நாங்கள் அந்த பத்திரிகையின் நிருபர்கள்" என பிரபல பத்திரிகையின் பெயரைச் சொல்ல, காவல்துறையும் அவர்களுக்கு பிரபல ஹோட்டல்களில் அறை எடுத்துகொடுத்து தங்க வைத்துள்ளது. பின்னர், அவர்கள் போலியான நிருபர்கள் எனத் தெரிய வந்ததையடுத்து, விஷயம் வெளியேத் தெரியாமல் அடக்கி வாசித்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று முருகன், ரூபசீலன் மற்றும் வேல்முருகன் ஆகிய மூவரைக் கொண்ட டீம் ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோயில் எதிரே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் விற்பதாகக் கூறி, "நாங்கள் யுனிவர்செல் பத்திரிகையின் நிருபர்கள். ரூ.50 ஆயிரம் கொடுங்கள். இல்லையெனில் நாங்கள் செய்திகள் வெளியிட்டு உங்கள் நிறுவனத்தின் பெயரை அசிங்கப்படுத்திவிடுவோம்" என அக்கடையின் உரிமையாளரை மிரட்டியிருக்கின்றனர். "சரி பணம் தருகின்றோம்" என அவர்களை அங்கேயே உட்காரவைத்துவிட்டு, உரிமையாளர் ஜவஹர் அலி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் போலி நிருபர்களான பாண்டியூர் முருகன், பெருவயல் வேல்முருகன், கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பு ரூபசிலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த போலி அடையாள அட்டையையும் கைப்பற்றினர். விசாரணையில், இதற்கு முன்னதாக அரண்மனை சாலை, சாலை தெருவிலுள்ள கடை ஒன்றிலும் இதேமுறையில் ஏமாற்றி ரூ.12,000 வசூல் செய்தது கண்டறியப்பட்டது.