சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை முடக்கலாமா என முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 390ஐ தாண்டியது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 70- க்கும் மேற்பட்ட மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பட்டியலில் ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் பரிந்துரைப்படி மூன்று மாவட்டங்களையும் முடக்கலாமா? மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தினால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9- ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.