Three children drown in lake ..! The villagers in grief

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமு, மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு 3-1/2 வயதில் விக்னேஷ், சர்வேஷ் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிமேகலை, தன் சொந்த ஊரான திருப்பெயரில் உள்ள தனது அப்பா வீட்டிற்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

அப்போது மணிமேகலையின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது உறவினரின் மகன் விவேகன் ஆகிய மூவரும் தங்களது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மூவரும் நேற்று மாலை காணாமல் போயுள்ளனர். அதனால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக கிராமம் முழுவதும் குழந்தைகளைத் தேடியுள்ளனர்.

பல இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் வேப்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததனர். அத்தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் விரைந்துவந்து தீவிரத் தேடலில் ஈடுபட்டனர். அப்போது அக்கிராமத்தின் அருகேயுள்ள ஏரியில் குழந்தைகள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்புத் துறை வீரர்களுடன், 15 அடி ஆழம் கொண்ட ஏரியில்தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

அதே சமயம், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் மற்றும் சார் ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர். சுமார் 7 மணி நேர தேடுதலுக்குப் பின்பு மணிமேகலையின் இரட்டைக் குழந்தைகளான விக்னேஷ் மற்றும் சர்வேஷ் ஆகிய இருவரையும் ஏரியில் இருந்து சடலமாக தீயணைப்புத் துறையினர் கண்டெடுத்தனர்.மேலும் மணிகண்டனின் மகனான விவேகன் கிடைக்காததால், தீயணைப்புத் துறையினர்பொதுமக்களின் உதவியுடன், தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு முழுவதும் விவேகன் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையேவேப்பூர் காவல்துறையினர் சர்வேஷ், விக்னேஷ் ஆகிய 2 குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேசமயம் இன்று காலை கடலூரில் இருந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரத் தேடுதலுக்குப் பின் விவேகன் சடலமும் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்ததால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.