
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள கோவிலில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் லட்சுமணன் என்பவரின் மகன் சந்தோஷ் (7) மற்றும் ஒரு சிறுமி உட்பட 3 பேர் குளத்தில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்த பொழுது மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவன் நீருக்குள் மூழ்கி விட, சிறுவனை காப்பாற்ற சந்தோஷ் என்ற சிறுவனும் அதனைத் தொடர்ந்து சிறுமி ஒருவரும் குளத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் மூன்று பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதில் ஒரு சிறுவனின் உடல் ஊரணியில் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், அந்த இடத்தில் வந்து பார்த்த பொழுது சிறார்களின் ஆடைகள் குளத்தின் படித்துறையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக குளத்தில் இறங்கி மூன்று பேரின் சடலமும் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறார்களின் உடல்களை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.