
கிருஷ்ணகிரி அருகே, சிறுமியுடன் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுத்த வீடியோவைக் காட்டி, நண்பர்களுக்கு இரையாக்க முயன்ற புகாரின்பேரில் காதலன் உட்பட மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள வால்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்தச் சிறுமி, அவருடைய பக்கத்து ஊரான நெடுங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர் வீட்டில் இருந்துவருகிறார். உள்ளூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சந்திரகணேஷ் (32) என்ற இளைஞர், சிறுமியுடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.
அப்போது சிறுமியிடம் கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் பலமுறை 'நெருக்கமாக' இருந்துள்ளார். மேலும், சிறுமியுடன் தனிமையில் இருக்கும்போது ரகசியமாக செல்ஃபோனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 26ஆம் தேதி அந்தச் சிறுமி, வீட்டின் பின்பக்கம் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு காலைக்கடன் கழிப்பதற்காக ஒதுங்கியுள்ளார். அப்போது சந்திரகணேஷ், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் தேநீர் கடை நடத்திவரும் ஜீவா (20), வாகன ஓட்டுநரான ரமேஷ் (31) ஆகியோருடன் அங்கு வந்துள்ளார்.
சிறுமியிடம் சந்திரகணேஷ் முதலில் தன்னுடனும், பிறகு நண்பர்களுடனும் தான் சொன்னபடி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்குச் சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரகணேஷ், இருவரும் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் காட்டி, தான் சொன்னபடி கேட்காவிட்டால் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் கலக்கமடைந்த சிறுமி, அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனாலும், அடுத்தடுத்து நாட்களிலும் சிறுமியை சந்திரகணேஷ் மிரட்டிவந்துள்ளார். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் நடக்கக் கூடாதது நடந்துவிடும் எனக் கருதிய சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பெற்றோர் மகளை அழைத்துக்கொண்டு பர்கூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின்பேரில் சந்திரகணேஷ், ஜீவா, ரமேஷ் ஆகியோர் மீது விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கற்பகம், வழக்குப் பதிவுசெய்து கைது செய்தார். சந்திரகணேஷிடம் இருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரிடமும் விசாரணை நடந்துவருகிறது.