Skip to main content

கள்ளச்சாரயம் காய்ச்சிய மூவர் கைது..! 

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Three arrested for illegal alcohol


ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர், தனது ஆட்டுப்பண்ணை அமைந்துள்ள தோட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சிவந்துள்ளார்.

 

கரோனா ஊரடங்கில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பின்படி வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத 11 மாவட்டங்களில் ஒன்று ஈரோடு மாவட்டம். இதைப் பயன்படுத்தி வெளி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மது வகைகளைக் கொண்டு வந்து ஈரோடு மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

இதன் ஒரு பகுதியாக அரசியல் பிரமுகர்கள் துணையுடன் சிலர் காட்டுப் பகுதியில் உள்ள தோட்டங்களில் கள்ளச்சாராய ஊறல் போட்டு அதைக் காய்ச்சி விற்பனை செய்வதும் வழக்கமாக இருந்துவருகிறது. 

 

இந்நிலையில், முருகேசன் மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த ரகு, தாமரைக்கண்ணன் ஆகியோர் கவுந்தப்பாடி அருகே உள்ள மின்ன வேட்டுவபாளையம் என்ற பகுதியில் உள்ள நேரு தோட்டத்தில் ஆட்டுப் பண்ணை நடத்திவருகிறார்கள். இந்தத் தோட்டத்தில் முருகேசன் தொடர்ச்சியாக சாராயம் காய்ச்சி அதை வெளிநபர்களிடம் விற்பனை செய்துவந்துள்ளார். இதுவரை வெளிவராத இந்த சாராய விற்பனை, அவர் குழுக்குள் ஏற்பட்ட பிசினஸ் கொடுக்கல் வாங்கல், வரவு செலவு முறைகேட்டால் போலீசுக்குத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி காலை ரெய்டு சென்ற கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார், அந்தத் தோட்டத்தில் இருந்த சாராய ஊறல்களை அழித்ததோடு விற்பனைக்கு இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் முருகேசன், அவர் குழுவைச் சேர்ந்த ரகு, தாமரைக்கண்ணன் ஆகிய மூவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.


 
இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் சிலரும், பாஜகவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும், ஈரோடு மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இந்தச் செய்தி மதிமுகவினருக்கு தெரியவர மதிமுக நிர்வாகிகள் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்கையாக கூற வேறு வழி இல்லாமல் போலீஸார் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் முருகேசன் உட்பட மூவரையும் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்