Threatening to the nutrition female employee!  struggle collector's office!

விழுப்புரம் மாவட்டம், வி. புதுப்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி அன்னபூரணி. இவர், அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணி செய்து வருகிறார். இவரது மகன் தமிழரசன். இவர்கள் இருவரும் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திடீரென ஆட்சியர் அலுவலக வாசலில் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அன்னபூரணியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இருவரும்தான் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

Advertisment

அப்போது அவர், “எனக்கு 2 மகன்கள். மூத்த மகன் அஜித்குமார், இளைய மகன் தமிழரசன். மூத்த மகன் அஜித்குமார், வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவரிடம் கார் டிரைவராக பணியாற்றினார். கடந்த ஒரு வருடமாக அந்த நபருக்கு காரோட்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அந்த நபர் எங்களிடம் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டிவந்தார்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு அடியாட்கள் மூலம் எனது மூத்த மகன் அஜித்குமாரை தாக்கினார். அதோடு என்னிடமும் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்கிறார். இதுகுறித்து எங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், அங்குள்ள போலீசார் அது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இதன் காரணமாகவே நாங்கள் தீக்குளிக்க முயன்றோம்” என்று கூறினார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். மேலும் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அன்னபூரணிக்கும் அவரது மகனுக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.