
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியின் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சங்கீதா வெங்கடேசன். இந்த நகராட்சியின் 15வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த மனோகரன். இவர் நகராட்சி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “நகர்மன்ற தலைவர் சங்கீதாவின் கணவர் வெங்கடேசனின் அண்ணன் கார்த்திக் நகராட்சியில் ஒப்பந்ததாரராக பதிவு செய்து பணிகள் செய்து வருகிறார். அவர் என்னுடைய 15வது வார்டில் 20 அடி அகலத்தில் கல்வெட்டு கட்டும் பணியைச் செய்துவருகிறார். இதுதொடர்பாக என் வார்டில் பணி செய்கிறீர்கள், கவுன்சிலரான என்னிடம் ஏன் தகவல் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் சிறப்பாக தொடக்கவிழா செய்து இருக்கலாம் என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘உங்கிட்ட எதுக்கு சொல்லனும், உனக்கெல்லாம் தகவல் சொல்லனும்கிற அவசியம் எனக்கில்ல..’ என 63 வயதான எனக்கு என் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் மோசமாக பேசினார். கடந்த 10ஆம் தேதி நகராட்சி ஆணையாளரை சந்தித்து இதுகுறித்தும் பேசிவிட்டு வெளியே வந்தேன். அப்போது அதே கார்த்திக் என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, ‘அந்த வேலை உன் வார்டுல நடக்கல, உங்கிட்ட எதுக்கு சொல்லனும்? பார்க்கறியா ரவுடிகளை விட்டு உன்னை என்ன பன்னுகிறேன் பார்..’ என மிரட்டினார். நகரமன்ற உறுப்பினருக்கே இங்குபாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது, மேற்கண்ட நிகழ்வின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆளும்கட்சி கவுன்சிலர், ஆளும்கட்சி சேர்மனின் கணவரின் அண்ணன் மீது புகார்கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் நகரத்தில் நான்கு கோஷ்டிகள் உள்ளன என கூறப்படுகிறது. சங்கீதா வெங்கடேசன் தொடக்கத்தில் திமுக ந.செ ராஜேந்திரன் ஆதரவாளராக இருந்தார். பின்பு தொகுதி எம்.எல்.ஏ நல்லதம்பி ஆதரவாளராக மாறினார். நகராட்சி சேர்மனாக சங்கீதா இருந்தாலும் ஆக்டிங் சேர்மனாக இருப்பது அவரது கணவர் வெங்கடேசன்தானாம். இதுபோன்று பல குற்றச்சாட்டுகள் வெங்கடேசன் மீது உள்ளதால், இதுகுறித்து மா.செ தேவராஜ் மூலமாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் புகார் செய்ய கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.