
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.9 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்கள் உடைய அனல் மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் இரவு, பகலாக நடைபெற்று தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. கடலில் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.
முதற்கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் யூனிட்டில் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் உள்ளன. மே மாத இறுதிக்குள் முதல் யூனிட் முழுமையாக செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடற்கரையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் கப்பலை நிறுத்தி அங்கிருந்து அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு வருவதற்கான உயர்மட்ட ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் இன்ஜினியர் ஒருவரது இ மெயிலுக்கு இன்று மதியம் மர்ம நபர் ஒருவர் அனுப்பியிருந்த மெயிலில் அனல் மின் நிலைய வளாகத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் டி.எஸ்.பி மகேஷ் குமார், குலசேகரபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் 20 பேர் விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்று வந்த இந்த சோதனையில் மாலை 6 மணி வரை எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ மெயில் அனுப்பிய நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி