ilamaran

சேலத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டி வந்த பிரபல ரவுடி இளமாறனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் அழகாபுரம் அருண் நகர், பாரதி சாலையைச் சேர்ந்தவர் இளமாறன் (41). கடந்த 2017ம் ஆண்டு, ஆட்டையாம்பட்டி பகுதியில் சர்ச்சைக்குரிய சுவர் ஒன்றை கூட்டாளிகளுடன் சேர்ந்து இடிக்க முயன்றார். அதைத் தடுக்கச் சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தார். இது தொடர்பாக இளமாறன் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisment

அதே ஆண்டு நவம்பர் மாதம், சேலம் பள்ளப்பட்டி பகுதியில் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசியதாக அவர் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2018, ஜனவரி மாதம் தனியார் கல்லூரிக்குள் நுழைந்து தாளாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு வழக்கு பாய்ந்தது.

Advertisment

கடந்த ஜூன் மாதம் அம்மாபேட்டையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கடந்த ஜூலை மாதம் இளமாறன் குடியிருக்கும் வீடு அருகே உள்ள ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவருடைய கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவானது.

தொடர்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளமாறனை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தார். அவர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ரவுடி இளமாறனை போலீசார் குண்டர் சட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6, 2018) கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.