Skip to main content

பிரபல வழிப்பறி கொள்ளையன் கபாலி மீது மூன்றாவது முறையாக பாய்ந்தது குண்டாஸ்!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018


சேலத்தில் பிரபல வழிப்பறி கொள்ளையனான கபாலி என்கிற சுப்ரமணியை மூன்றாவது முறையாக போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கபாலி என்கிற சுப்ரமணி (26). கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சீலநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

 

rowdy

 

அவரிடம் இருந்த ரூ.1050 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கத்தி முனையில் பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்தார். அப்போது அங்கிருந்த சிலர் அவரை பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியைக் காட்டி கொன்று விடுவதாக மிரட்டியபடி, தப்பிச்சென்றார். தங்கமணியின் தம்பியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கபாலி கொலை செய்துவிட்டார். அந்த வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்றும் தங்கமணியை அவர் மிரட்டியுள்ளார்.

 


இதுகுறித்து அப்போது வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், தற்போது அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் செவ்வாய்பேட்டை பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு, ஜூன் மாதம் கொண்டலாம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு ஆகிய குற்ற வழக்குகளும் கபாலி மீது விசாரணையில் உள்ளது.

 


தொடர்ந்து சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கபாலி என்கிற சுப்ரமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர், சேலம் மாநகர துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில், இன்று கபாலியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே அவர் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.