Skip to main content

ஆசியாவில் உயரமான குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த காகித பூ மாலைகள்!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமத் திருவிழாவில் குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். கோயிலின் முன்னால் 33 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் தோற்றத்துடன் ஒரு குதிரை சிலையும் எதிரே ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. வில்லுனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது யானை சிலை உடைந்து போனது. ஆனால் குதிரை சிலை அப்படியே 100 ஆண்டுகளை கடந்தும் நிற்கிறது. சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்ட குதிரை சிலை அதிக வலுவுள்ள சிலை.
 

pudukottai

 

10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் கிராமத்தார்களின் துணையுடன் பலரது உதவியுடன் கோயில் சீரமைப்பு பணிகள் நடந்த போது குதிரை சிலையை சீரமைக்க உடைக்க முடியாத அளவில் வலுவாக இருந்ததால் அப்படியே மராமத்து செய்யப்பட்டு கம்பீரமாக நிற்கிறது 33 அடி குதிரை சிலை.

இந்த குதிரை சிலையுடன் கூடி பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா மாசிமகத்தில் 2 நாட்கள்  நடக்கிறது. இந்த திருவிழாவின் சிறப்பே 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வது தான். லாரி, வேன், கார், போன்ற வாகனங்களில் மாலைகளை ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்து வழிபட்டு செல்கிறார்கள் பக்தர்கள். இந்த மாலைகள் 3 மாதங்களுக்கு முன்பிலிருந்தே தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடுகிறது.
 

 

pudukottai

 

இன்று மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் கிராமத்தில் சார்பில் குதிரை சிலைக்கு வெள்ளை, பச்சை பட்டுகள் மாலை போல அணிவிக்கப்பட்டு தொடர்ந்து முதல் மாலையாக சம்பங்கி பூ மாலை அணிவித்து தீபாரதணை காட்டப்பட்ட பிறகு தொடர்ந்து காய்கனி, பழங்களால் கட்டப்பட்ட மாலைகள் குதிரை சிலைக்கு பக்தர்களால் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி, கார், வேன் களில் சுமார் 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மாலைகளை கொண்டு வந்து அணிவித்தனர். ஆயிரக்கணக்கில் மாலைகள் குவிந்தது. மாலைகளை அணிவிக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இன்றும் மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பல்வேறு இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம். மாலைகள் அணிவிப்பதை காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அறந்தாங்கி, பேராவூரணி, புதுக்கோட்டை, கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், திருச்சிற்றம்பலம் என பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் என பல்வேறு நேர்த்திக்கடன்களும் செய்கிறார்கள்.

 

pudukottai

 

ஒரு பக்தர் கூறும் போது... இந்த கோயில் திருவிழாவின் சிறப்பே ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான். வழக்கமாக பளபளக்கும் மாலைகள் அணிவிக்கப்படும். இந்த ஆண்டு எளிதில் மக்கும் காகித பூ மாலைகளையே பக்தர்கள் அணிவிக்கின்றனர். ஒரு மாலை ரூ. 3 முதல் 10 ஆயிரம் வரை ஆகிறது. சுமார் 2 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றார்.
 

ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளதை போல திங்கள் கிழமை இரவு நடக்கும் தெப்பத் திருவிழாவையும் காண மக்கள் கூடுவார்கள் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.