/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn-sec-art_0.jpg)
மிக்ஜாம் புயல் காரணமாகச்சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சேர்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் இந்த மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களைக்கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ - மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதளம் வாயிலாக இன்றிலிருந்து (11.12.2023) பதிவு செய்யலாம். மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாகச் சான்றிதழ்களின் விபரங்களைப் பதிவு செய்த பின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உயர் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர்சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)