ADVERTISEMENT

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

09:31 AM Mar 29, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT