Those who do not write the exam will not be able to pass

அரியர் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும், தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

Advertisment

அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார், ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (16.04.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகளும்எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்துதேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில், எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்றுதெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertisment

அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள். இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆன்லைன் மூலமாக நடத்துவதற்கான தேதிகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக யுஜிசி-யிடமும் கலந்தாலோசிக்கப்படும் எனவும், ஆன்லைன் மூலம் எழுதாதவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தேர்வு நடத்த இருக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாக யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், ஆன்லைன் மூலம் ஏற்கனவே தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டனர். தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு எவ்வளவு விரைவாக தேர்வுகளை நடத்தலாமோ, அதன்படி 8 வாரங்களுக்குள் தேர்வு நடத்த உத்தரவிட்டனர். பின்னர் அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.